search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணை எரித்துக்கொன்ற வாலிபர் கைது"

    தன்னிடம் பேச மறுத்ததால் பெண்ணை எரித்துக்கொன்றுவிட்டு நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 38). இவருடைய மனைவி அஞ்சலை(30). சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அஞ்சலை வீட்டில் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் அஞ்சலையுடன் அதே பகுதியை சேர்ந்த சங்கர்(20) என்பவர் அதிக நேரம் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவில் தங்கியிருந்த சங்கரை போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்திருந்தனர். இந்த நிலையில் அதிகாலை சங்கர், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் சங்கரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அக்கராயப்பாளையம் காட்டுப்பகுதியில் சங்கர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அஞ்சலையை தீ வைத்து எரித்துக்கொலை செய்ததாக சங்கர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், அஞ்சலைக்கும் ஒரே ஊர் இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஞ்சலை என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். செல்போன் அழைப்பையும் ஏற்க மறுத்தார்.

    இதனால் சம்பவத்தன்று நான் அஞ்சலையின் வீட்டுக்கு சென்று, ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய்? என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், வெளிநாட்டில் இருக்கும் தனது கணவர், ஊருக்கு வருவதால் என்னிடம் பேச முடியாது என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கையால் தாக்கினேன்.

    உடனே அஞ்சலை தனது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். அப்போது நீ என்னை மிரட்டுகிறாயா என்று கேட்டேன். பின்னர் நானே உன்னை கொலை செய்து விடுகிறேன் என்று கூறி, அஞ்சலை மீது தீ வைத்து விட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தேன். அஞ்சலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    உடனே நானும் வீட்டுக்குள் சென்று எதுவும் தெரியாதது போல் நடித்தேன். அஞ்சலையின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தேன். பின்னர் அஞ்சலையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அஞ்சலையை கொண்டு சென்றனர். அப்போது நான் செல்லவில்லை.

    இந்த நிலையில் அஞ்சலை ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

    இதை அறிந்த நான் போலீசார் எப்படியும் என்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் பெங்களூரு சென்று விட்டேன். இருப்பினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து சங்கரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×